கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,483 படுக்கைகள் தயார்

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,483 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

Update: 2022-01-12 14:57 GMT
தேனி: 


தீவிரம் அடையும் கொரோனா
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தினசரி கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. ஆனால், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகள் குறித்து கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் பல கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும், மக்கள் பலர் முக கவசம் அணியாமல் உலா வருகின்றனர். இனி வரும் காலங்களில் அபராதம் விதிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

படுக்கை வசதிகள்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கொரோனா நல சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 483 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றில் 10 சதவீதம் படுக்கைகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன.

 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மொத்தம் 13 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அவர்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்