அரியவகை தாவரங்களை நடவு செய்ய திட்டம்

நாடுகாணி தாவரவியல் சூழல் மேம்பாட்டு பூங்காவில் அரியவகை தாவரங்களை நடவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-01-12 16:24 GMT
கூடலூர்

நாடுகாணி தாவரவியல் சூழல் மேம்பாட்டு பூங்காவில் அரியவகை தாவரங்களை நடவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தாவரவியல் சூழல் பூங்கா

அழிவின் பிடியில் உள்ள மரம், செடி, கொடி மற்றும் புற்களை பாது காக்கும் வகையில் கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள நாடுகாணியில் தாவரவியல் சூழல் மேம்பாட்டு பூங்கா செயல்பட்டு வருகிறது. 

இந்த பூங்காவில் 1,500-க்கும் அதிகமான தாவரங்கள் உள்ளன. இங்கு கோழிக் கொல்லி ஆதிவாசி மக்களை கொண்டு சுற்றுசூழல் மேம்பாட்டு குழு மூலம் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பசும் புல்வெளிகள் காய்ந்து வருகிறது. இதனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே உள்ள சின்னத்துவரை என்னும் குரோட்லேரியா லாங்கிபீஸ் உள்பட பல்வேறு தாவரங்கள் அழிவின் விளம்பில் உள்ளது. எனவே இந்த தாவரங்களை அழிவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

சிறப்பு திட்டம் தொடக்கம்

இதற்காக மர இனங்களின் மறு அறிமுகம் மற்றும் மீட்பு திட்டம் என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து தாவரவியல் பூங்கா கண்காணிப்பு கோபுரம் உள்ள வனப்பகுதியில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஒம்காரம் சின்னத்துவரை செடிகளை நட்டு தொடங்கி வைத்தார். 

இதேபோல் கோவை வனவியல் பயிற்சி கல்லூரி மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மஞ்சுநாதா மற்றும் அவரது குடும்பத்தின் சார்பில் அசோக மரங்கள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறை யினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கல்வி சுற்றுலா

தாவரவியல் பூங்கா வனப்பகுதியில் அரிய வகை தாவரங்கள் நன்கு வளரும். இவற்றின் விதைகளை சேகரித்து பூங்கா வனபகுதிகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயிர்ச்சூழல் மண்டலத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

தாவரவியல் சூழல் பூங்கா வனப்பகுதியும் மேம்பாடு அடையும். எதிர் காலத் தலைமுறைகளுக்கு சிறந்த கல்வி சுற்றுலாவாக தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்