இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள்-தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

Update: 2022-01-12 17:42 GMT
தர்மபுரி:
புத்தாடைகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகளும், கோவில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகள் என மொத்தம் 37 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இதேபோன்று கோவில்களில் ஆண், பெண் என மொத்தம் 69 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மொத்தம் 106 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 8 பேருக்கு இவை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 2 சீருடைகள் வழங்கப்படுகிறது.
எளிதில் அடையாளம்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களை அடையாளம் காண வசதியாக அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார் மற்றும் பூசாரிகளுக்கு மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், சரக ஆய்வாளர்கள் மணிகண்டன், தனசூர்யா, வழக்கு ஆய்வாளர் பெரமன், செயல் அலுவலர்கள் சபரீஸ்வரி, விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்