பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், புத்தாடைகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காய்கறி மற்றும் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

Update: 2022-01-12 17:55 GMT
திருவண்ணாமலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காய்கறி மற்றும் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். 

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை ெகாண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் நேற்று முதல் கரும்பு கட்டு, மஞ்சள் கொத்துகள் போன்றவை வெளியூர்களிலிருந்து லாரி, வேன்களில் வியாபாரிகள் கொண்டுவந்த வண்ணம் உள்ளனர்,
மேலும் புத்தாடைகள் எடுக்க பெரிய முதல் சிறிய துணி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

 சாலையோரங்களில் உள்ள தரைக்கடைகளில் துணி வியாபாரங்களும் அமோகமாக நடந்து வருகிறது. 
காய்கறி மார்க்கெட்டுகளில் இன்று நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் நேற்றே ஏராளமானோர் பொங்கலுக்கு தேவையான காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றவாறு உள்ளனர்.
இதனால் நேற்று திருவண்ணாமலை நகரமே பரபரப்பாக காணப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) பொங்கல் பொருட்கள் விற்பனை உச்சகட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன்கடைகளில் கரும்பு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதால் மற்ற பொருட்களான மஞ்சள் கொத்து, காய்கறிகள், கிழங்கு வகைகள், வாழை இலை விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை போன்றவற்றில் இதற்கு தேவையான ஏற்பாடுகள் தயாராகி உள்ளன.

காய்கறி விலை

திருவண்ணாமலை உழவர் சந்தையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:- 
தக்காளி- ரூ.20-30, உருளைக்கிழங்கு- ரூ.30- 50, வள்ளிக்கிழங்கு- ரூ.15- 20, கருணக்கிழங்கு- ரூ.20- 30, சின்னவெங்காயம்- ரூ.60- 80, வெங்காயம் (பெல்லாரி) - ரூ.30- 45, பூண்டு- ரூ.60-80, கத்தரிக்காய்- ரூ.40- 80, வெண்டைக்காய்- ரூ.56-60, 
அவரைக்காய்- ரூ.60- 72, பீன்ஸ்- ரூ.40- 48, பூசணிக்காய்- ரூ.20- 25, சேப்பங்கிழங்கு- ரூ.16- 20, மரவள்ளிக்கிழங்கு- ரூ.15- 20, சர்க்கரை வள்ளிக்கிழங்கு- ரூ.36- 40, பீட்ரூட்- ரூ.70, கொத்தவரைக்காய்- ரூ.36- 40, மாங்காய்- ரூ.60- 120 என விற்பனை செய்யப்பட்டது. 

இன்று (வியாழக்கிழமை) மேற்கண்ட காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றும், இருந்தாலும் ரூ.5 அல்லது ரூ.10 என்ற அளவிலேயே வித்தியாசம் இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்