சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற ரூ.1 கோடி தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கியது.

Update: 2022-01-13 04:45 GMT
ரகசிய தகவல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம், வெளிநாட்டு பணம், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும், அவை சுங்க இலாகா அதிகாரிகளின் பிடியில் சிக்குவதும் வழக்கமாக உள்ளன.

இந்த நிலையில் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாய் செல்ல தயாராக இருந்த 3 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணம்

விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதால் அவர்களது உடைமைகளை கடும் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது 3 பேரின் டிராலி சூட்கேசின் கைப்பிடியில் அமெரிக்க டாலர்கள், ஐக்கிய அரபு தினார், குவைத், பக்ரைன் நாட்டு தினார், ஓமன் ரியால் ஆகியவை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 3 பேரிடம் இருந்து ரூ.55 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அதைத்தொடர்ந்து, 3 பேரின் விமான பயணத்தை ரத்துசெய்த சுங்க இலாகா அதிகாரிகள் பணத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? பிடிபட்டவை ஹவாலா பணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் சிக்கியது

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்காததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது சட்டை, பேண்ட் ஆடைகளுக்குள் ரகசிய அறை வைத்து அதில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. ரூ.60 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 386 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்