5 நாள் தரிசன தடை எதிரொலி பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் "அரோகரா" கோஷம் விண்ணை முட்டியது

5 நாள் தரிசன தடை எதிரொலியால் நேற்று பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய "அரோகரா" கோஷம் விண்ணை முட்டியது.

Update: 2022-01-13 15:40 GMT
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. எனினும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் முதலே பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். எனவே பாதயாத்திரை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த வாரம் முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் தைப்பொங்கல் மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தரிசன தடை எதிரொலியால் நேற்று பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. அவர்கள் வெகுநேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அடிவாரம், சன்னதிவீதி, கிரிவீதிகள், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது விண்ணை முட்டும் அளவுக்கு பக்தர்கள் "அரோகரா" கோஷம் எழுப்பினர். பழனியில் நேற்று திரும்பிய திசையெங்கும் பக்தர்களை காணமுடிந்தது. 

மேலும் செய்திகள்