மளிகை கடையை விரிவாக்கம் செய்ய கடன் பெற்று 25 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி; வாலிபர் கைது

விழுப்புரம் போலீசார் நடவடிக்கை

Update: 2022-01-13 16:48 GMT
விழுப்புரம், 
விழுப்புரம் கே.கே.சாலை மாந்தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி சுதா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு விழுப்புரம் மகாராஜபுரத்தில் மதுரை குருவப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் நடத்தி வந்த தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் கணினி இயக்குபவராக 2 மாதங்கள் பணியாற்றினார். அப்போது பால்ராஜ் மகன் தங்கபாண்டியன் (வயது 35) என்பவர் சுதாவுக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சுதாவை, தங்கபாண்டியன் சந்தித்துள்ளார். அப்போது அவர் தான், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், கடை நல்ல முறையில் நடப்பதாகவும் சுதாவிடம் கூறியுள்ளார். அதன் பிறகு சுதா, சில நாட்கள் கழித்து அந்த மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தங்கபாண்டியன், அவரது மனைவி சரண்யா, சகோதரர்கள் கடற்கரைலிங்கம், குமாரவேல் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது அவர்கள், இந்த மளிகை கடையை விரிவுப்படுத்த பணம் தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை தருமாறும் சில மாதங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி தருவதாகவும் சுதாவிடம் கேட்டுள்ளனர். இதை நம்பிய சுதா கடந்த 20.3.2021 அன்று வங்கி கணக்கு மூலமாக தங்கபாண்டியனுக்கு ரூ.17 லட்சத்து 70 ஆயிரத்தை அனுப்பினார். பணத்தை பெற்ற தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும், சில மாதங்கள் கழித்து சுதாவுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றினர். பலமுறை அவர் வற்புறுத்தியும் பணத்தை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த சூழலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர்கள் 4 பேரும் மளிகை கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதேபோல் அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வாடிக்கையாளர்களாக வந்து பொருட்கள் வாங்கிச்சென்ற விழுப்புரம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கடையை விரிவாக்கம் செய்ய கடனாக ரூ.1½ கோடி வரை பெற்று, அந்த பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சுதா உள்பட பாதிக்கப்பட்ட 25 பேர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தங்கபாண்டியன், சரண்யா, கடற்கரைலிங்கம், குமாரவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற தங்கபாண்டியனை, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். மேலும் சரண்யா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்