திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கோவிந்தா...கோவிந்தா... கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-13 17:47 GMT
திருமயம்:
சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் நேற்று பரமபதவாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு முன்னதாக சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் மோகினி அவதாரம், விஸ்வரூப தரிசனமான ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி கொண்டு வந்து சொர்க்கவாசல் முன்பு நிறுத்தினார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு 
தொடர்ந்து நேற்று காலை 5 மணி அளவில் ஆழ்வார் மோட்சம் கொடுக்க மேள, தாளங்கள் முழங்க பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து சொர்க்கவாசல் வழியாக சத்தியமூர்த்தி பெருமாள் சென்று புஷ்பா ஊரணி வழியாக பவனி வந்தார். அதன் பின்னர் வசந்த மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சொர்க்கவாசலில்  செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. 8 மணிக்கு பின்னர் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளிவிட்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இதில்  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
வரதராஜ பெருமாள் கோவில் 
புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பெருந்தேவி நாயகர் சமேத ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைதொடர்ந்து வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதேபோல் புதுக்கோட்டை அருகில் உள்ள கடையக்குடி ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மூலவர் பிரசன்ன ரெகுநாதர் பெருமாள்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் ராமர், சீதாதேவி, இளையபெருமாள் லெஷ்மணர் ஆகியோர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பின்னர் உற்சவர் பிரசன்ன ரெகுநாதர் பெருமாள், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் பல்லவன் குளக்கரையில் உள்ள விட்டோபா பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே பெருமாள் பட்டியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்டஏகாதசி விழாவை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் கிராமத்தில் தென்திருப்பதி என அழைக்கப்படும் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவியுடன் ஆதிகேசவ பெருமாள் தங்க ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீரனூர்
கீரனூர் அருகே களமாவூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் கோவில், குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குளத்தூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உறவினர் 2  பேர் பாடலூரில் நடந்த விபத்தில் பலியானதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் கோவில் சாத்தப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம் அரிமளம் பேரூராட்சி செட்டி ஊரணி கரையில் தென்கலை பூமிநீலா சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக கோவிலுக்குள், பல்லக்கில் கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி பரவசத்தோடு சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரராஜ பெருமாளை வழிபட்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்