தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ரூ.8¼ கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ரூ.8¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-01-13 18:04 GMT
சிவகங்கை,

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ரூ.8¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை தாங்கினார். சமூகநலஅலுவலர் அன்பு குளோரியா வரவேற்று பேசினார்.
 விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கி பேசியதாவது:-

கல்வி அறிவு பெற..

ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் உயர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் அரசால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் ரூ.50 லட்சம் கோடிக்கு கடனை வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனாலும் நமது முதல்-அமைச்சர் அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
 இந்த திட்டத்தின் நோக்கம் பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதுதான். பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

ரூ.8¼ கோடி 

 தற்போது வரை 9 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 2019-ம் ஆண்டு வரை விண்ணப்பித்த 2 ஆயிரத்து 500 பேருக்கு தற்போது ரூ.8 கோடியே 23 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கமும் 16 கிலோ தங்கமும் வழங்கப்படுகிறது.இதன் மூலம் 16 கோடியே 16 லட்சம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் மீதமுள்ள 6,900 பேர்களுக்கு இனிவரும் காலங்களில் வழங்கப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் பாலசந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியசாந்தாராணி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மதன்குமார், மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்