ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

எட்டயபுரம் அருகே ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்

Update: 2022-01-15 12:16 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளரும் சிக்கினார்.
ஆட்டோவில் மது கடத்தல்
எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பட்டிதேவன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 480 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது 
ஆட்டோவில் இருந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் (வயது 49), ராகுல் (22) என்பதும், டாஸ்மாக் கடையிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். 
டாஸ்மாக் மேற்பார்வையாளர் சிக்கினார்
மேலும், நாகலாபுரம் அருகே செங்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நிர்ணயித்த அளவை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து,  சட்டவிரோத மது விற்பனைக்கு உதவியாக இருந்ததாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் கோமகுருநாதன் (47) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்