முழுஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்

முழுஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா களையிழந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது.

Update: 2022-01-16 16:45 GMT
கடலூர், 

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) ஊரடங்கையும், 9-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு கடந்த 6-ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. இருப்பினும் ஒரு சில மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக இருசக்கர வாகனங்களில் சென்றதை காண முடிந்தது.

காணும் பொங்கல்

மேலும் பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட்டன. ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. பார்சல்கள் மட்டுமே உணவு வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கிடையே கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் விழா நடந்தது. மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் காணும்பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

சுற்றுலா தலங்கள்

இந்நாளில் பொதுமக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்து மகிழ்வார்கள். ஆனால் காணும் பொங்கலான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் கூடவும், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் காணும் பொங்கலான நேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர். மேலும் பொதுமக்கள் தாங்கள் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த இறைச்சியை சமைத்து குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனர்.
இதன் காரணமாக காணும் பொங்கல் அன்று எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் கடலூர் சில்வர் பீச், துறைமுகம், பிச்சாவரம் சுற்றுலா மையம்  மற்றும் ஆற்றங்கரைகள் உள்ளிட்ட பகுதிகள் நேற்று மக்கள் நடமாட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. 

நடராஜர் கோவில்

குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று கபடி, கோ கோ உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும், கும்மி அடித்து பாட்டு பாடியும் உற்சாகமாக பொழுதை போக்குவார்கள். ஆனால் இந்தாண்டு ஊரடங்கால் நடராஜர் கோவில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்