மழை வெள்ளத்தின்போது உணவு வழங்க உதவிய காளை மாடுகளுக்கு பொங்கல் விழா

மழை வெள்ளத்தின்போது உணவு வழங்க உதவிய காளை மாடுகளுக்கு பொங்கல் விழா மாலை அணிவித்து, கற்பூரம் காட்டி கிராம மக்கள் வழிபட்டனர்.

Update: 2022-01-16 23:10 GMT
திருவொற்றியூர்,

சென்னை மணலி அருகேயுள்ள செட்டிமேடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழையாலும், புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததாலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்-கண்ணகி தம்பதிக்கு சொந்தமான மாட்டு வண்டியில் சென்றுதான் 2 நாட்களாக அந்த பகுதி மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கினார்கள்.

இந்தநிலையில் மழை வெள்ள காலத்தில் தங்களுக்காக வீடு தேடி வந்து உணவு வழங்க உதவிய காளை மாடுகளுக்கு அந்த கிராம மக்கள் நன்றி செலுத்தும் விதமாக தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் தலைமையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு அந்த 2 காளை மாடுகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து மாலையிட்டு, பூசணிக்காய், தேங்காய், கற்பூரம் சுற்றி வழிபட்டனர். தங்களுக்காக உழைத்த மாடுகளுக்கு நன்றி கடனாக அந்த பகுதி மக்கள் செய்த இந்த செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்