கர்நாடகத்தில் முழு ஊரடங்கு இல்லை

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது என்றும், இப்போதைக்கு மாநிலத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-17 21:30 GMT
பெங்களூரு: கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது என்றும், இப்போதைக்கு மாநிலத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உயர்மட்ட குழு ஆலோசனை

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரவு நேர மற்றும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆனாலும் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பில் இருந்து பசவராஜ் பொம்மை மீண்டு வந்திருப்பதால், காணொலி காட்சி மூலமாகவே இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கட்டுப்பாடுகளில் தளர்வு

பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்தபடியே மந்திரிகள், அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிபுணர்கள் குழுவினர் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அளித்திருந்த சிபாரிசுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கும், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 லட்சம் பரிசோதனை

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் அதிகப்படியான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் தினமும் 1½ லட்சம் பேருக்கு தான் சராசரியாக கொரோனா பரிசோதனை நடக்கிறது. கர்நாடகத்தில் தினமும் 2 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கொரோனா பரவல் தடுக்கப்படும்.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களில் குறைந்த அளவே தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. அந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மருத்துவ வசதிகளை அதிகரித்து கொள்ளவும், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற 25-ந் தேதி உச்சம் தொடும்

கர்நாடகத்தில் வருகிற 25-ந் தேதி கொரோனா உச்சம் தொடும் என நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா உச்சம் தொட்ட பின்பு, தற்போது குறைய தொடங்கி உள்ளது. அதுபோல், கர்நாடகத்தில் 25-ந் தேதி அல்லது 26-ந் தேதி கொரோனா உச்சம் தொட வாய்ப்புள்ளது. இதில், ஓரிரு நாட்கள் முன், பின் ஆகலாம். அதன்பிறகு, கொரோனா பாதிப்பு குறைய தொடங்க வாய்ப்புள்ளது.

அதனால் வருகிற 21-ந் தேதி மீண்டும் ஒருமுறை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வருகிற 21-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தியேட்டர்கள், ஓட்டல்கள் உள்பட கொரோனா தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அதில், எந்த விதமான மாற்றமும் செய்யவில்லை.

முழு ஊரடங்கு இல்லை

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநிலத்தில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்துவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற எண்ணமும் அரசுக்கு இல்லை. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுவதால், அதற்கான அவசியம் இல்லை.
வார இறுதி நாட்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளில் தளர்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏனெனில் கொரோனா உச்சம் தொட்ட பின்பு, குறைய தொடங்கும். அதனால் தளர்வுகளை எந்த மாதிரி அமல்படுத்தலாம் என்பது குறித்தே ஆலோசித்தோம்.

21-ந் தேதி முடிவு

வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்துவதா?. வேண்டாமா? என்பது குறித்து வருகிற 21-ந் தேதி மீண்டும் நடைபெற உள்ள கூட்டத்தில் தான் முடிவு எடுக்கப்படும். 21-ந் தேதி இரவில் இருந்து தான் ஊரடங்கு அமலுக்கு வரும். எனவே அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு செய்யப்படும். இதில் அரசு அவசர முடிவு எடுக்காது.

கர்நாடகத்தின் 6½ கோடி மக்களின் உயிர் மட்டுமே அரசுக்கு முக்கியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படியே அரசு செயல்படும். யாருடைய (ஓட்டல் உரிமையாளர்கள்) வற்புறுத்தலுக்கும் அரசு அடிபணியாது.
இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்