சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது பணியில் இருந்த 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-01-20 00:26 GMT
பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த சட்டக்கல்லூரி மாணவரான வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (வயது 21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அப்துல்ரஹீம், போலீஸ்காரரை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தில் அவரை போலீசார் விடிய விடிய சரமாரியாக தாக்கியதாக போலீஸ் கமிஷனரிடம் அப்துல்ரஹீம் புகார் அளித்தார்.

பணியிடை நீக்கம்

அதன்பேரில் விசாரணை நடத்திய சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி, போலீஸ் ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்தரகுமார் இருவரையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றியதுடன், காத்திருப்போர் பட்டியலிலும் வைத்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஏட்டு பூமிநாதன், போலீஸ்காரர் உத்தரகுமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அப்போது பணியில் இருந்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன், எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசிமா மற்றும் போலீஸ்காரர் ஹேமநாதன் ஆகிய 3 பேரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்