அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா

ராமநாதபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-20 08:25 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், டாக்டர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது.
தொற்று உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2-வது அலையை விட கூடுதலாக உள்ளது. தினமும் 120 முதல் 150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 
16 பேருக்கு கொரோனா
இந்தநிலையில் தற்போது பருவ நிலை மாற்றம் அதிக பனிப்பொழிவு காரணமாக ஏராளமானோருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் நோயாளிகள் பிரிவில் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன் உள்பட 4 அரசு டாக்டர்கள், 12 நர்சுகள் என மொத்தம் 16 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் 3-வது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அல்லி கூறும்போது, எதிர்பார்த்ததை விட கொரோனா பரவல் தற்போது அதிகமாக உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்படவில்லை என்பதற்காக பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பல டாக்டர்கள், நர்சுகளுக்கும் கொரோனா தொற்று பாதித்து உள்ளது. அவர்களும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்