பவர்டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

சைமா சங்கத்துடன் பவர் டேபிள் சங்க கட்டண உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-20 14:34 GMT
திருப்பூர்
சைமா சங்கத்துடன் பவர் டேபிள் சங்க கட்டண உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் பவர்டேபிள் சங்கம் இடையே கட்டண உயர்வு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு சங்க பிரதிநிதிகளும் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. பவர் டேபிள் சங்க செயற்குழு கூட்டத்தில், முதல் ஆண்டில் 30 சதவீதமும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா 15 சதவீதமும் என மொத்தம் 75 சதவீத கட்டண உயர்வு கேட்க முடிவு செய்தது.
இதுகுறித்து சைமா சங்கத்துக்கு பவர்டேபிள் சங்கம் கடிதம் அனுப்பியது. பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் நேற்று மாலை சைமா அலுவலக அரங்கில் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
ஒத்திவைப்பு
சைமா சங்க செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் ராமசாமி, சசி அகர்வால், ரூபா அனந்து உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள். பவர் டேபிள் சங்கத்தின் சார்பில் தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பவர் டேபிள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்தபடி 75 சதவீத கூலி உயர்வு 4 ஆண்டுகளில் அமல்படுத்தவேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் 2 மாதத்தில் ரூ.7 தையல் கட்டணம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சைமா சங்கத்தினர், அடுத்த வாரம் தங்கள் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்