காவிரி குடிநீர் வழங்ககோரி நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

காவிரி குடிநீர் வழங்ககோரி நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Update: 2022-01-20 16:24 GMT
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு மேற்கு தெரு பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் கோரையாற்று குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு நாள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி குடிநீர் மட்டும் வழங்கும்படி மனு அளித்தனர். இதற்கிடையே நேற்று காலையில் காவிரி மற்றும் கோரையாற்று தண்ணீரை கலந்து விட்டதாக தெரிகிறது. 
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவிரி குடிநீர் மட்டும் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பேரூர் செயலாளர் ரவிநாத் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நாமகிரிப்பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்