ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-20 18:17 GMT
ஜெயங்கொண்டம், 
கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலப்பரப்பில் 20 சென்ட் அளவில் ஆண்டவர் திருக்கோவில் கட்டப்பட்டு 5 தலைமுறையாக வழிபட்டு வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக கிராம மக்களிடையே வரிவசூல் செய்து கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
இந்தநிலையில் கோவிலுக்கு வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக நேற்று நடைபெற இருந்த கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கடாரங்கொண்டான் கிராம மக்கள் நேற்று காலை திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆமணக்கந்தோண்டி பஸ் நிலையத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) சங்கர் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ரவி சக்கரவர்த்தி, ஷாகிராபானு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதனைதொடர்ந்து கடாரங்கொண்டான் கிராம மக்கள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதி வழங்கக்கோரி போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது அதிகாரிகள் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு அளிக்கும் படி அறிவுறுத்தினார்கள். மேலும் உரிய விசாரணை செய்து ஆர்.டி.ஓ. நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்