திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர்: கலெக்டர்

திருவள்ளூர் மாவடடத்தில் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

Update: 2022-01-23 13:47 GMT
அபராதம் விதிப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களிடம் இருந்து சுகாதாரத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறையினர் தற்போது வரை ரூ.3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 450 அபராதம் விதித்துள்ளனர். தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி அபராதத்தொகை ஒரு நபருக்கு ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 95 சதவிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 65 சதவீத பேர் 2-ம் தவணை தடுப்பூசியும், 5 ஆயிரம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 1,400 படுக்கைகள் கொண்ட மையங்களும், 330 ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 7,750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கபசுர குடிநீர் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொற்று இல்லாத மாவட்டம்

மேலும் கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசின் ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு மாவட்டத்தில் முழுவீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் பொருட்டு போதுமான மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தவறாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இல்லாத திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

மேலும் செய்திகள்