ஞாயிறு முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2022-01-23 16:53 GMT

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி ஞாயிற்றுக் கிழமையான நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடலூரில் உள்ள லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் ரோடு, பாரதி சாலை, நேதாஜி சாலை, நெல்லிக்குப்பம் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட், மீன் அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டன. 

மீன் மார்க்கெட்டுகள் மூடப்படும் என்று அறிந்ததும் நேற்று முன்தினமே  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி வைத்துக்கொண்டனர். சிலர் இறைச்சிகளையும் வாங்கி குளிர்சாதன பெட்டிகளில் வைத்தனர்.

வெறிச்சோடியது

அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை. 

இதனால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தடை யை மீறி சென்றவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.  இதற்காக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

சாலையோர கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதேவேளை மருந்து, பால் கடைகள், ஓட்டல்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பெட்ரோல் பங்க்குகளும் திறந்து இருந்தன. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. 

கடலூர் பஸ் நிலையம், திருவந்திபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நோய் பரவலை தடுக்கும் வகையில் நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

முடங்கியது

திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்களை போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர். திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் சிலர் திருமண அழைப்பிதழை காண்பித்து சென்றதையும் பார்க்க முடிந்தது. ஆஸ்பத்திரிகள், வங்கித்தேர்வு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றவர்களையும் போலீசார் விசாரித்து அனுப்பினர். அப்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதேபோல் பண்ருட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் பண்ருட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல வருவாய் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், புவனகிரி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முழு ஊரடங்கையொட்டி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்