ரூ.34½ லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறக்கப்படுமா?

வாய்மேடு மேற்கு பகுதியில் ரூ.34½ லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-01-24 16:53 GMT
வாய்மேடு:-

வாய்மேடு மேற்கு பகுதியில் ரூ.34½ லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

கால்நடை வளர்ப்பு

நாகை மாவட்டம் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பெரும்பாலானோர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பகுதியாக வாய்மேடு பகுதி உள்ளது. இயற்கை பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ஓரளவுக்கு கைகொடுக்கிறது. 
இந்த நிலையில் நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பகுதியில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் பலன் அளிக்கும் இந்த கால்நடை மருந்தகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

வேதனை

இந்த கால்நடை மருந்தகம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டதாகும். இங்கு கால்நடை மருந்தகம் கட்ட வேண்டும் என்பது மக்களின் பிரதான கோரிக்கைகளுள் ஒன்றாக இருந்தது. அதன்படி மருந்தகம் கட்டப்பட்டு, பல மாதங்களாக மூடிக்கிடப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘வாய்மேடு பகுதியில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உள்ளன. வாய்மேடு மேற்கு பகுதியில் கடந்த ஆட்சியில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது. இந்த மருந்தகம் கடந்த 7 மாதங்களாக திறக்கப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வாய்மேடு மேற்கில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ஆயக்காரன்புலத்தில் உள்ள கால்நடை மருந்தகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. 

பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

கால்நடை மருந்தகம் இல்லாமல் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 
வேதாரண்யம் ஒன்றிய பகுதியில் 9 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. இந்த மருந்தகங்களுக்கு ஒரே ஒரு கால்நடை மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். எனவே கூடுதலாக கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும்’ என்றனர். 

மேலும் செய்திகள்