ஊராட்சி பெயர்பலகை வைக்க எதிர்ப்பு இரு தரப்பினர் சாலை மறியல்

கே.வி.குப்பம் அருகே ஊராட்சி பெயர்பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். அதை கண்டித்து மற்றொரு தரப்பினரும் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-24 18:17 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே ஊராட்சி பெயர்பலகை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். அதை கண்டித்து மற்றொரு தரப்பினரும் மறியலில் ஈடுபட்டனர்.

பெயர் பலகை வைக்க எதிர்ப்பு

கே.வி.குப்பம் அடுத்த ரங்கம்பேட்டை கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு ஓரமாக ெரயில் பாதையைக் கடப்பதற்கான சாலை உள்ளது. இந்த பகுதி ரங்கம்பேட்டை கேட் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ரங்கம்பேட்டை என்பது சோழமூர் பஞ்சாயத்தில் உள்ளது. இந்த சாலையின் அருகில் வேலம்பட்டு ஊராட்சி (தலைவர், உறுப்பினர் பெயர்களுடன்)  என்ற பெயர்ப்பலகை சில தினங்களுக்கு முன்பு புதிதாக வைக்கப்பட்டது.
 
இந்த இடம் ரங்கம்பேட்டை கேட் பஸ் நிறுத்தம் என்ற பெயரில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெயர் மத்திய-மாநில அரசு பதிவேடுகளிலும் இடம்பெற்று இருக்கிறது. இந்த இடம் வேலம்பட்டு பஞ்சாயத்துக்கு சொந்தமானது. சோழமூர் பஞ்சாயத்தில் உள்ள ரங்கம்பேட்டை கிராமத்தின் பெயர் இங்கு கூடாது. அந்த பெயர்ப்பலகையை இங்கு வைக்கக்கூடாது என்று வேலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பினர் சாலை மறியல்

 இதனால் இருதரப்பு ஆண்களும் பெண்களுமாக சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென காட்பாடி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது எல்.சி.58 ரங்கம்பேட்டை கேட் என்ற பெயர்ப்பலகையை மர்ம நபர்கள் சிலர் நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று அகற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டில் உள்ள ரங்கம்பேட்டை கேட் என்ற பெயர் பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க  வேண்டும் என்றும், புதிதாக வைக்கப்பட்ட வேலம்பட்டு ஊராட்சிமன்ற பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்றும் கோஷமிட்டனர். 

எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இடம் வேலம்பட்டு பஞ்சாயத்துக்கு சொந்தமானது என்பதால் வேலம்பட்டு ஊராட்சி மன்ற பெயர்ப்பலகை மட்டும் இருக்க வேண்டும் என்றும், ரங்கம்பேட்டை பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்றும் போராடினர். தகவல் அறிந்ததும் லத்தேரி, பனமடங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாராமன், செல்வகுமார், வெங்கடேசன், ரங்கநாதன், கே.வி.குப்பம் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.ரவிச்சந்திரன், வேலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மேவிதாதீர்த்தகிரி, சோழமூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் வேலம்பட்டு ராஜசேகர், சோழமூர் பாலச்சந்தர் மற்றும் வருவாய் துறையினர் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து இரண்டு வகையான பெயர்ப்பலகைகளையும் அகற்றி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்