கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்

நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2022-01-26 19:23 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, 332 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
குடியரசு தினவிழா
நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது.
இந்த விழாவில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் அரவிந்த் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உடன் இருந்தார். 
முதல்-அமைச்சர் பதக்கம்
பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் வானில் பறக்கவிட்டனர்.
அதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 63 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. இதில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பங்கேற்று அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் அரவிந்த் ஏற்றுக் கொண்டார்.
பாராட்டு சான்றிதழ்
அதன்பிறகு சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். அந்த வகையில் போலீஸ் துறையில் 57 பேருக்கும், கொரோனா மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் சிறப்பாக பணியாற்றிய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 163 பேருக்கும், சிறப்பாக பணியாற்றிய 96 பேருக்கும், மாநில அளவில் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான மகிழ் கணிதம் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 9 பேருக்கும், பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகியவற்றின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 2 மருத்துவமனைகளுக்கும், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் ஊரக நலத்துறை மூலம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பயிர்விளைச்சல் போட்டியில் நெல் பயிரில் முதல் பரிசு பெற்ற விவசாயி ஒருவருக்கும், ஊர்காவல் படையை சேர்ந்த 5 பேருக்கும் என மொத்தம் 332 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, விஜய்வசந்த் எம்.பி. மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழக்கமாக போலீசாரின் அணிவகுப்பில் ஏராளமான போலீசார் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக அணிவகுப்பில் குறைவான போலீசாரே கலந்து கொண்டனர். 
குடியரசு தின விழாவை யொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நேற்று காலை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழா நிறைவடையும் வரை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை
குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் குடியரசு தின விழா இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்தது. முக்கியமாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. அதோடு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
குமரி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 
----

மேலும் செய்திகள்