தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-01-26 20:02 GMT
நாய்கள் தொல்லை
கும்பகோணம் ஒன்றியம் பழவத்தான் கட்டளை ஊராட்சி  பாலாஜி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர் சாலையில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை விரட்டி  சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நாய்கள் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பன்னீர்செல்வம், பழவத்தான் கட்டளை.
மின் விளக்கு எரியுமா?
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாமரங்கோட்டைதெற்கு ஊராட்சியில் மஞ்சவயல் கிராமத்தில் முருகன் கோவில் அருகில் சோலார் மின் விளக்கு உள்ளது. தற்போது சில மாதங்களாக மின்விளக்கு எரிவது இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி எரியாமல் உள்ள மின் விளக்கை எரிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-வி.தேவதாஸ், மஞ்சவயல்.
மயான பாதை சீரமைக்கப்படுமா?
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி, வனதுர்கா நகர், காமராஜர் நகர் அருகில் மயானம் உள்ளது. மயானத்துக்கு செல்லும் சாலையின் இருபுறமும் செடி- கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. மழை காலங்களில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், மனோஜிப்பட்டி.


மேலும் செய்திகள்