புதிய மலர் நாற்றுகள் நடவு

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 3½ லட்சம் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2022-01-27 13:17 GMT
குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 3½ லட்சம் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. 

கோடை சீசன்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. அதன்பிறகு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. இந்த சீசன் காலங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதையொட்டி அவர்களை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள பூங்காக்களில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இந்த மலர்களை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

சிம்ஸ் பூங்கா

இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் சுற்றுலா பயணிகளை கவர பழக்கண்காட்சி நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகள் மட்டும் கொரோனா பரவலால் பழக்கண்காட்சி நடைபெறவில்லை.எனினும் இந்த ஆண்டு சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று 3 லட்சத்து 63 ஆயிரம் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதை தோட்டக்கலை துணை இயக்குனர் பிரேமாவதி தொடங்கி வைத்தார். 

120 வகை

தொடர்ந்து சால்வியா, டேலியா, பால்சம், மேரிகோல்டு, ஆஸ்டர், செல்லோசியா போன்ற 120 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. இவை அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டது. புதிதாக நடவு செய்யப்படும் நாற்றுகளில் உருவாகும் மலர்கள் வருகிற கோடை சீசனில் பூத்துக்குலுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்