வழிபாட்டு தலங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ‘வழிபாட்டு தலங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது’ என்று அரசியல் கட்சியினருக்கு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-01-29 14:04 GMT
ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ‘வழிபாட்டு தலங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது’ என்று அரசியல் கட்சியினருக்கு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி பேசியதாவது:- வாக்குகளை பெற சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளும் விடுக்கக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வெகுமதியோ கொடுக்க கூடாது. 

ஒலிபெருக்கி கூடாது

பொது இடங்களில் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வாக்கு சேகரிப்பு போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.  

உள்ளாட்சி அமைப்புகளில் புதிய பணிகளை மேற்கொள்ள கூடாது. ஏற்கனவே நடந்து வரும் பணிகளுக்கு தடை இல்லை. அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் தனி நபருடைய இடம் அல்லது பொது இடத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் கட்டவோ, பதாகைகள் வைக்கவோ அனுமதி இல்லை. வேட்பாளர்கள் உரிய அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. 

உதவி மையம்

தேர்தல் பிரசாரத்திற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வாக்காளர்கள் உதவி மையம் அமைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்