உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 18 பவுன் நகை, ரூ11 லட்சம் பறிமுதல்

வாணியம்பாடி, ஆம்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 18 பவுன் நகைகள், ரூ11 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-29 17:04 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி, ஆம்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 18 பவுன் நகைகள், ரூ11 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
வாகன தணிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பஜார் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர்  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் குடியாத்தம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சுமார் ரூ.6½ லட்சம் மதிப்பிலான 18 பவுன் நகைகளை எடுத்து வந்துள்ளார்.

அவரை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து, வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்டாலின் பாபுவிடம் ஒப்படைத்தனர்.

ரூ.11 லட்சம் பறிமுதல்

ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் வங்கியின் மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். 

இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.11 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்