வெளிநாட்டு பறவைகளை பிடித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை

அதிராம்பட்டினம் அலையாத்திகாட்டு பகுதியில் வெளிநாட்டு பறவைகளை பிடித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-30 19:52 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அலையாத்திகாட்டு பகுதியில் வெளிநாட்டு பறவைகளை பிடித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அலையாத்தி காடுகள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.  அலையாத்தி காடுகள் திருவாரூர் மாவட்ட எல்லையான முத்துப்பேட்டை முதல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் வரை கடற்கரையையொட்டி அரணாக அமைந்துள்ளது. அலையாத்தி காடுகளால் கடலுக்கும், கடற்கரை பகுதி மக்களுக்கும் ஏராளமான நன்மைகள் உண்டு.
கடலில் விழுகின்ற அலையாத்தி இலைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு இரையாக பயன்படுகிறது. அதேபோல கடலில் ஏற்படும் புயல் மற்றும் சுனாமி உள்ளிட்டவை களிலிருந்து கடலோர மக்களை காக்கும் அரணாக விளங்கி வருகிறது.
வெளிநாட்டு பறவைகள்
அதிராம்பட்டினம்,  தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு, முடுக்குக்காடு, கருங்குளம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை  வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்த காலங்களில் ஜப்பான், மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மாலத்தீவு, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து  பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அலையாத்தி காடுகளுக்கு வந்து இங்கேயே தங்கி இருக்கும். பின்னர்  கோடை காலம் தொடங்குவதற்கு முன் புறப்பட்டு சென்று விடும். 
தற்போது அலையாத்திக்காட்டுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை இறைச்சிக்காக பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
நடவடிக்கை 
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில்,
அதிராம்பட்டினம் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பறவைகளை பிடிப்போர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு பிடிக்கப்பட்ட பறவைகளை பறிமுதல் செய்து, மீண்டும் பறக்க விடும் நிலையே காணப்படுவதால் இத்தகைய அத்துமீறல் தொடர்ந்து கொண்டே உள்ளது. எனவே பறவைகளை பிடிப்பது குற்றம் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு இடங்களில் பறவைகளை பிடிக்கப்படுவது குறித்து  தகவல் தெரிவிக்கும் வகையில் தொடர்பு எண் வெளியிடப்பட வேண்டும். பறவைகள் பிடிப்போர் குறித்து கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். இறைச்சிக்காக வெளிநாட்டு பறவைகளை பிடித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்