முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆற்றங்கரையில் குவிந்த மக்கள்

தை அமாவாசையையொட்டி வீரபாண்டியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆற்றங்கரையில் மக்கள் குவிந்தனர்.

Update: 2022-01-31 16:00 GMT
உப்புக்கோட்டை:
தமிழ் மாதங்களில் தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களது ஆசி நேரடியாக கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் அன்றைய தினங்களில் மக்கள் ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க ஆற்றங்கரை, கடற்கரையில் குவிந்தனர். 
இதேபோல் தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோவிலை ஒட்டியுள்ள முல்லைப்பெரியாற்றில் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் நேற்று குவிந்தனர். அப்போது அவர்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் நீராடினர். பின்னர் கோவிலில் வழிபாடு செய்தனர். இதையொட்டி வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்