நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-02-08 17:03 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். 

ரெயில்வே கேட் மூடல்

நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை காலி பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் வந்தது. இதற்காக காலை 5.30 மணி அளவில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. சரக்கு ரெயிலின் காலி பெட்டிகளை பிரித்து நிறுத்தும் பணியும், என்ஜினை திசை மாற்றும் பணியும் நடந்தது.  இந்த பணிகள் முடிய 1 மணி நேரத்துக்கும் மேலானது. இதனால் ரெயில்வேகேட் மூடப்பட்டு இருந்ததால் சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தஞ்சை-நாகை நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு சென்ற பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். 

திட்ட பணிகள்

பின்னர் 6.40 மணி அளவில் ரெயில்வே கேட் திறந்த பின்பு வாகனங்கள் புறப்பட்டு சென்றன. நீடாமங்கலம் நகரில் அடிக்கடி ஏற்படும் இந்த போக்குவரத்து நெருக்கடியை போக்க மந்தமான நிலையில் நடைபெறும் இருவழிச்சாலை திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்