கம்பைநல்லூர் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

கம்பைநல்லூர் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-03-20 17:48 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூர் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் செங்குந்தர் தெருவில் உள்ள  சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி புற்றுமண் எடுத்தல், கொடியேற்றுதல் நடந்தது. தொடர்ந்து தினமும் சாமி திரு உலா வருதலும், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தலும், இரவு இடும்பன், கும்ப பூஜையும், சாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் விநாயகர் தேரோட்டமும், சாமி உலா வருதல் மற்றும் உற்சவமும் நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நாளான நேற்று சுப்பிரமணிய சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் மாசிலாமணி, கோவில் தர்மகர்த்தா சக்திவேல், பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், துணைத்தலைவர் மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தனபால் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை ெதாடங்கி வைத்தனர். 
சிறப்பு பூஜை
தொடர்ந்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து நிலை சேர்த்தனர். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்