வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ15 லட்சம் மோசடி பெண் உள்பட 8 பேர் மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-03-27 16:25 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் காந்தி (வயது 34). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் பட்டதாரி வாலிபர் காந்தியிடம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நன்னடத்தை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கவிதா ராமதாஸ் என்பவர் ரூ.15 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.
வேலை கிடைக்காததால் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று காந்தி அந்த பெண்ணிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பணத்தை பல முறை கேட்டும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தார். இதனால் ஏமாற்றமடைந்த காந்தி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சென்னை டி.ஜி.பி. அலுவலக உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக கவிதா ராமதாஸ், அவரது கணவர் வினோத் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்