மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம்

மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம் செய்தனர்.

Update: 2022-04-11 22:52 GMT
திருச்சி:

மாடு வதைக்கூடம் முற்றுகை
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள மாடு வதைக்கூடத்திற்கு கொண்டு வரப்படும் மாடுகள் டாக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படாமல் வெட்டப்படுவதாகவும், அனுமதியின்றி ஏராளமான மாடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்து அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்து அமைப்பினர் அங்கு திரண்டு மாடு வதைக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, மாடுவதைக் கூடத்துக்குள் ஏராளமான கன்றுக்குட்டிகளும், பசுமாடுகளும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அப்போது, நாளை (நேற்று) அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
அதன்படி, அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் ரவி, தயாநிதி, மாநகர் நல அதிகாரி டாக்டர் யாழினி, போலீஸ் உதவி கமிஷனர்கள் அஜய்தங்கம், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், அகில இந்திய இந்து மகாசபா மணிகண்டன், விசுவ இந்து பரிஷத் சசிகுமார், இந்து முன்னணி மணிகண்டன் மற்றும் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது சினை பசுக்களையும், கன்றுகளையும் எக்காரணம் கொண்டும் மாடு வதைக்கூடத்தில் வெட்டக்கூடாது. தற்போது அங்கு அடைக்கப்பட்டுள்ள சினை பசுக்களையும், கன்றுகளையும் விடுவித்து கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
வாக்குவாதம்
4 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் காரசாரமாக விவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அது வாக்குவாதமாக மாறியது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்பினரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். அதன்பின்னரே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்