உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை தின்ற 11 மாணவர்களுக்கு வாந்தி காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு

காவேரிப்பட்டணம் அருகே உப்பு என நினைத்து ஆய்வகத்தில் இருந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை தின்ற, 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2022-04-29 16:08 GMT
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உப்பு என நினைத்து ஆய்வகத்தில் இருந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை தின்ற, 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பள்ளி மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ளது மோரனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி. இதில், 941 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள், 180 பேருக்கு ஒரே நேரத்தில் ஆய்வக தேர்வு நடந்தது. அதற்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் வேதியியல் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் மெக்னீசியம் பாஸ்பேட்டை காகிதத்தில் மடித்து ஜன்னல் ஓரம் வைத்து உள்ளனர். நேற்று காலை 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற அந்த பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர்கள் ஜன்னல் ஓரத்தில் இருந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை மிளகாய்தூள், உப்பு கலவை என நினைத்து எடுத்து சென்று, தாங்கள் வைத்திருந்த மாங்காயுடன் சேர்த்து சாப்பிட்டு உள்ளனர்.
11 பேர் மயக்கம்
இந்த நிலையில் சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்துள்ளனர். சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து வாந்தி எடுத்து மயங்கிய மாணவர்கள் 10 பேர் மற்றும் ஒரு 6-ம் வகுப்பு மாணவன் ஆகிய, 11 பேரை ஆசிரியர்கள் காவேரிப்பட்டணம் அரசு  ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்காமல் ஒரே படுக்கையில் 2 முதல் 5 மாணவர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்