விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ் மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில்பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-29 16:52 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு மனைவி மகேஸ்வரி (வயது 60). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அரசு உதவித்தொகை பெறும் மக்களுக்கு நேரடியாக சென்று பணம் வழங்கும் பணியை செய்து வருகிறார். 


இவர் நேற்று காலை 11 மணியளவில் அந்த வங்கிக்கு சென்று ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். ஏற்கனவே அவர் ரூ.45 ஆயிரம் வைத்திருந்தார். மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கத்தை ஒரு பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்து நடந்து பழைய பஸ் நிலையம் அருகில் வந்தார்.

பின்னர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி ஆழாங்கால் பகுதிக்கு புறப்பட்டார். அந்த பஸ், விழுப்புரம் காந்தி சிலை அருகில் சென்றபோது பயணச்சீட்டு எடுப்பதற்காக தான் வைத்திருந்த பேக்கை திறந்தபோது அதில் வைத்திருந்த பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

உடனே அவர் பஸ்சை நிறுத்தச்சொல்லி பஸ்சின் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். பின்னர் அவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி தான் நடந்து வந்த பாதைகளிலும் தேடிப்பார்த்தபடி அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடம் பணம் பற்றி கேட்டார். 

தொடர்ந்து, வங்கிக்கு சென்று தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலில் யாரோ மர்ம நபர், மகேஸ்வரி வைத்திருந்த பணப்பையை நைசாக அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. 


இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்