நாமகிரிப்பேட்டை அருகே இறந்த தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் சகோதரர்கள்

நாமகிரிப்பேட்டை அருகே இறந்த தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் சகோதரர்கள்

Update: 2022-04-29 17:17 GMT
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அருகே இறந்த தாய்க்கு கோவில் கட்டி சகோதரர்கள் வழிபட்டு வருகின்றனர்.
அளவற்ற பாசம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாவல்பட்டி காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் முருகேசன். இவருடைய தம்பி பச்சமுத்து. இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது தாய் அலமேலு (வயது 72) இறந்து விட்டார். தாயின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த முருகேசன் மற்றும் பச்சமுத்து இருவரும் மன அமைதிக்காக கோவில் கோவிலாக சென்று வந்தனர். 
இந்த நிலையில் தான் அண்ணன், தம்பி இருவருக்கும் தங்களது தாய்க்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து அவர்களது தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் தங்களது தாய்க்கு கோவில் கட்டினர். அதில் கருவறையில் 2¾ அடி உயரத்தில் தாயாரின் முகவடிவில் கருங்கல் சிலை அமைத்தனர். 
பாராட்டு
தினந்தோறும் தாய் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
சொத்துக்காக பெற்றோரை அடித்துக்கொலை செய்யும் பிள்ளைகள், பாகப்பிரிவினை செய்து வைத்தது சரியில்லை என கூறி பெற்ற தாயை வீட்டு சிறையில் அடைத்து மண் சோறு சாப்பிட வைக்கும் கொடூர மகன்களுக்கு இடையே இறந்து போன தங்களது தாய்க்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபடும் மகன்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகள்