பல்லாவரம் பகுதியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பல்

பல்லாவரம் பகுதியில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையடித்த ஆந்திர மாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-07 11:52 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சையத் தவுலத் (வயது 78). இவர், கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை பறித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பல்லாவரம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை வைத்து அவர்களை தேடிவந்தனர்.

இந்தநிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை கண்காணித்த தனிப்படை போலீசார், மோட்டார்சைக்கிளை எடுக்க வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மாங்காட்டில் இருந்த அவரது கூட்டாளிகள் 6 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு (46), ரமேஷ் (42), சுரேஷ் (37), முரளி (42), கிருஷ்ணன் (50), பாபு (45), கார்த்திக் (30) என்பதும், இவர்கள் பல்லாவரம், சங்கர்நகர், மாங்காடு, குன்றத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வரும் நபர்களை நோட்டமிட்டு, அவர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம், 4 மோட்டார்சைக்கிள்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்