சிங்கம்புணரி அருகே விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி

சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காளைகள் முட்டி 60 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-05-08 18:10 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காளைகள் முட்டி 60 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஸ்ரீகலியுக மெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 9-ம் ஆண்டாக இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. ஊரின் மையப் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் பல ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர். காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. திருச்சி, தர்மபுரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் 800 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஒரு சில மாடுகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் சென்றன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசுகள், வெள்ளிக்காசுகள், பீரோ, கட்டில், டி.வி., சைக்கிள், பித்தளை அண்டா போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 
பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. 
60 பேர் காயம்
இதில் 60 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருங்காக்கோட்டை கிராம பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை செய்திருந்தனர். 
முன்னதாக கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உதவிய அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்