கிருஷ்ணகிரி அருகே மானை வேட்டையாடிய 4 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே 3 வயது ஆண் மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-09 05:13 GMT
கிருஷ்ணகிரி,:
கிருஷ்ணகிரி அருகே 3 வயது ஆண் மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
மான் வேட்டை 
கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில், வனவர் துரைக்கண்ணு, வன காப்பாளர்கள் முருகன், அங்குரதன், வன காவலர் பூபதி உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பிரிவுக்கு உட்பட்ட கணபதிபட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கையில் மூட்டையுடன் வந்த 4 பேரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்கள் கொண்டு வந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் 3 முதல் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
4 பேர் கைது 
இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் வனத்துறையினர் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிப்பட்டியை சேர்ந்த ராஜி (வயது 65), முருகன் (36), மாதையன் (58), சேலம் அழகாபுரம் அருகே உள்ள நகரமலை அடிவாரத்தை சேர்ந்த செல்லப்பன் (34) என்று தெரிய வந்தது.
அவர்கள் கணபதிப்பட்டி பகுதியில் மானை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தலையை தனியாக துண்டித்து விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொல்லப்பட்ட மானின் உடல் மற்றும் உரிமம் பெறாத ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தீவிர கண்காணிப்பு 
இது குறித்து ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வனத்துறையினர் வன குற்றங்களை தடுக்கவும், வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகள்