வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற வாலிபர்

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர், நேரடியாக பக்கத்து வீட்டுக்குள் புகுந்து கட்டையால் அடித்து விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Update: 2022-05-09 16:41 GMT
தேவகோட்டை,

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர், நேரடியாக பக்கத்து வீட்டுக்குள் புகுந்து கட்டையால் அடித்து விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இருவீட்டாருக்கும் தகராறு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு (வயது 65), விவசாயி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு விஜயராணி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.
சித்திரைவேலுவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகூர் பிச்சை. இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. 
நாகூர்பிச்சையின் மகன் செல்வம் (35). குவைத் நாட்டில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் மகன் செல்வத்திடம், இங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சித்திரைவேலு தங்களிடம் அடிக்கடி சண்டை போடுவதாக செல்போனில் அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் செல்வத்துக்கு பக்கத்து வீட்டினர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் ெவளிநாட்டில் இருந்து நாடு திரும்பி நேற்று முன்தினம் மாலை திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த செல்வம், அங்கிருந்து அண்டக்குடி கிராமத்திற்கு வாடகை காரில் புறப்பட்டு வந்தார். காரை விட்டு இறங்கி அவர் தனது வீட்டிற்கு கூட செல்லாமல், தனது குழந்தையையும் பார்க்காமல், வந்த கையோடு நேரடியாக  சித்திரைவேலு வீட்டுக்கு சென்றார். 
அங்கு கீழே கிடந்த கட்டையை எடுத்து சித்திரைவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். செல்வம் வந்த வாடகை காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக செல்வம் போலீசாரிடம் கூறியதாவது:-
எனது தாயாரையும், குடும்பத்தினரையும் பக்கத்து வீட்டினர் அடிக்கடி தகராறு செய்து அவமானப்படுத்தியதால் அவர்கள் மீது இருந்த ஆத்திரத்தால் அவசரப்பட்டுவிட்டேன். எனது ஆத்திரத்தால், பிறந்த குழந்தையை கூட பார்க்க முடியாமல் சிறைக்கு செல்ல நேரிட்டுவிட்டது” என கதறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்