செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-10 16:58 GMT

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில். இந்த கோவில் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

விழாவில், 9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

தேரோட்டம்

தொடர்ந்து, செஞ்சி கோட்டையில் உள்ள காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது செஞ்சிக்கோட்டையில் எருமை மாடுகள் வெட்டப்பட்டு, அதன் தலை மந்தைவெளிக்கு தூக்கிவரப்பட்டு தேர் சக்கரத்திற்கு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் மந்தைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் பூங்கரகம் மற்றும் சிறப்பு  அலங்காரத்தில் கமலக்கண்ணி அம்மன் எழுந்தருள, திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மந்தைவெளியில் இருந்து புறப்பட்ட தேர் பீரங்கி மேடு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சத்திர தெரு வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது, பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த பொருட்களை இறைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இதில்  சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க எழுமலை மற்றும் உபயதாரர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்