கர்நாடகத்தில் அனுமதி பெறாத ஒலிப்பெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற அரசு உத்தரவு

கர்நாடகத்தில் வழிபாட்டு தலங்களில் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-10 20:30 GMT
பெங்களூரு:

உரிய நடவடிக்கை

  நாட்டில் ஒலிப்பெருக்கிகளில் அதிக சத்தம் எழுப்பி அதன் மூலம் ஒலி மாசு ஏற்படுத்துவதை தடை செய்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் முஸ்லிம் மசூதிகளில் மசூதிகளில் ‘ஒலிப்பெருக்கியில் தொழுகை(அசான்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்ரீராமசேனை, பஜ்ரங்தள் உள்பட சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு போட்டியாக அந்த அமைப்புகள் கோவில்களில் ஒலிப்பெருக்கி மூலம் பக்தி பாடல்களை ஒலிபரப்ப தொடங்கியுள்ளன.

  இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிப்பெருக்கியில் தொழுகை நடத்துவது, பக்தி பாடல்களை ஒலிபரப்புவது போன்ற விஷயங்களில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் இதை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தருக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அகற்ற வேண்டும்

  அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவோர் அல்லது பொதுக்கூட்டங்களை நடத்துவோர் 15 நாட்களுக்குள் உரிய முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாதவர்களின் ஒலிப்பெருக்கிகளை தாமாகவே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட துறையினர் அதனை அகற்ற வேண்டும். ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து பல்வேறு நிலைகளில் குழுக்களை அமைக்க வேண்டும்.

  போலீஸ் கமிஷனர் உள்ள நகரங்களில் உதவி கமிஷனர், மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். பிற பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி ஆகியோரை கொண்டு குழு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவு, எங்கெல்லாம் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதோ, பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறதோ அங்கெல்லாம் பொருந்தும். இதுகுறித்து உரிய உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்