அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-11 01:07 GMT
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் குமணன் தலைமை தாங்கினார். முன்னதாக கருவூலத்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சிவசுப்பிரமணியம் வரவேற்று பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகி சரவணன், கிராம உதவியாளர் சங்க செயலாளர் பஞ்சநாதன் ஆகியோர்  பேசினர். மாவட்ட செயலாளர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்து பேசினார். தமிழகத்தின் நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று அறிவித்ததை கண்டித்தும், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் அமல்படுத்தி, அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரியும், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் சாந்தி, மாவட்ட இணை செயலாளர் சர்மிளா, மாவட்ட பொருளாளர் ஆனந்தவல்லி ஆகியோர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சிபிராஜா கண்டனம் தெரிவித்து பேசினார். முடிவில் சாலை பணியாளர் சங்க வட்டத் தலைவர் தர்மலிங்கம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், கருவூலத் துறை ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்