சாலை அமைக்கும் பணியில் முறைகேடு: மயிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் மேலும் ஒரு அதிகாரி பணியில் இருந்து விடுவிப்பு

சாலை அமைக்கும் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மயிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஒரு அதிகாரி, வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்காக அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Update: 2022-05-11 16:50 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கும்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணியம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிக்காக

 ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சாலைப்பணியை தொடங்கி சில நாட்கள் பணி நடந்து கொண்டிருக்கும்போது, இப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீத தொகையை தொழிலாளர்களுக்கு கூலியாக வழங்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு விடுவிக்க வேண்டும், 

ஆனால் அவ்வாறு இல்லாமல் சாலைப்பணியை தொடங்குவதற்கு முன்னதாகவே தொழிலாளர்களுக்கு கூலியாக வழங்குவதற்காக ஒப்பந்ததாரருக்கு ரூ.2 லட்சம் தொகை வழங்கப்பட்டிருப்பதும், இதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாள் மற்றும் ஒப்பந்த பணியாளரான கணினி ஆபரேட்டர் பாலு ஆகியோர் காரணமாக இருந்ததும், 

இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) புருஷோத்தமன் கண்காணிக்க தவறியிருப்பதும் தெரியவந்தது. இதுசம்பந்தமான விசாரணை அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் அளித்தார்.

3 பேர் மீது நடவடிக்கை

இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாளை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்தும்,  கணினி ஆபரேட்டர் பாலுவை பணிநீக்கம் செய்தும், மேலும் இந்த முறைகேட்டை கண்காணிக்க தவறிய குற்றத்திற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனை அங்கிருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்காக அப்பணியில் இருந்து விடுவித்தும் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்