கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

தோகைமலை அருகே கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-11 17:03 GMT
கரூர்
தோகைமலை, 
தொழிலாளி 
கரூர் மாவட்டம், கல்லடை ஊராட்சி, அழகனாபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). தொழிலாளி. இவர் ஆலத்தூர் ஊராட்சி காமனம்பட்டி அருகே திருச்சி தனியார் மருத்துவ மணைக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.           அப்போது முருகன் கிணற்றின் உள்ளே இறங்கி சக பணியாளர்களுடன் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
மண் சரிந்து சாவு
அப்போது திடீரென்று கிணற்றின் மேல் இருந்து மண் சரிந்து முருகன் மீது விழுந்து அமுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 
மேலும், நங்கவரம் ஆர்.ஐ. புவனேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் வைரப்பெருமாள், ஆர்ச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா கோவிந்தராஜ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் திருச்சி தீயணைப்பு உதவி அலுவலர் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை மீட்டனர். 
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்து முருகன் மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்