பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு வார கால பயிற்சி நாளை தொடங்குகிறது

பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு வார கால பயிற்சி நாளை தொடங்குகிறது.

Update: 2022-05-11 17:10 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து தாலுகாக்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக உட்பிரிவுகள் செய்து பட்டா வழங்கக்கோரும் மனுக்கள் தீர்வு செய்யப்பட உள்ளது.


இதற்காக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களையும் இணைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நில அளவைத்துறை அலுவலர்களால் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


இப்பயிற்சி உட்பிரிவு பட்டா மாறுதல், இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களை விரைந்து தீர்வு செய்திடும் நோக்கில் நடத்தப்படுவதால் மேற்கண்ட நாட்களில் நில அளவையர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.

 எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளுமாறும், பட்டா மாறுதல் இனங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்