நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-11 19:27 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி மரக்கன்று நடுதல், சுகாதாரப்பணிகள் மேம்படுத்துதல், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது மருத்துவ கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை மருத்துவ கண்காணிப்பாளர் சிவகுமார் வரவேற்று பேசினார். கண் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நான் ஏற்கனவே தென்காசியில் பணி புரிந்துள்ளேன். அந்த காலங்களில் நெல்லை, தென்காசியில் மருத்துவ வசதிகள் குறைவாக இருந்தன. தற்போது இங்கு மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மட்டும் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இதனை மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். இது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் வாழ்க்கையில் நாம் செல்லக்கூடாத 2 இடங்கள் உள்ளன. ஒன்று போலீஸ் நிலையம். மற்றொன்று ஆஸ்பத்திரி. எனவே இங்கு வந்துள்ள நீங்கள் இனியும் வரவேண்டாம் என்ற எண்ணத்தோடு பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்