பெரம்பலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 154 பேருக்கு சிகிச்சை

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 154 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-11 21:06 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திடும் நோக்கத்தில், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்கும் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 154 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் உயிர் பிழைத்து உள்ளனர்.  பெரம்பலுார் மாவட்ட போலீசார் சார்பில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பிரதிபலிப்பான்கள், பகலிலும் எச்சரிக்கையூட்டும் சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோல் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளாக 50 இடங்கள் கண்டறியப்பட்டு விபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறுகிறது. இதில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் பகுதியில் இதுபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதின் விளைவாக கடந்த 2 ஆண்டுகளில் 20 விபத்துகள் நடந்த நிலை மாறி, தற்போது ஓராண்டாக எந்த ஒரு விபத்தும் நடக்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்