பொதுமக்கள் பயம் இன்றி ஓட்டுப்போட ஏற்பாடுகள் தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா பேட்டி

பொதுமக்கள் பயம் இல்லாமல் ஓட்டுப்போட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.;

Update:2019-04-11 04:30 IST
சென்னை, 

தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள அசுதோஷ் சுக்லா நேற்று காலை 11.30 மணி அளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் அவருக்காக ஒதுக்கப்பட்ட தனி அறைக்கு சென்றார். அங்கு பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளேன். அந்த அனுபவம் எனக்கு உள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பொதுமக்கள் எந்தவித பயமும் இல்லாமல் ஓட்டுப்போட வேண்டும். அதுவும் முழுமையான அளவில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இதற்காக உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். மொத்தத்தில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடந்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பதவி ஏற்றவுடன் அவருக்கு சட்டம்-ஒழுங்கு போலீஸ் சிறப்பு டி.ஜி.பி. விஜயகுமார், ஐ.ஜி.க்கள் சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, சேஷசாயி, ஜெயராமன், தேர்தல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்