2,000 ரூபாய் நோட்டு செல்லாது - வங்கியில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2,000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டு இருக்கிறது.

Update: 2023-05-19 20:28 GMT

மும்பை,

பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி திடீரென டி.வி. யில் தோன்றிப்பேசி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.

அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்படி ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அப்போது பொதுமக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகளை செலுத்தி, மாற்றிக்கொள்ள கடும் சிரமங்களை அனுபவித்தனர். மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்றனர்.

அந்த நேரத்தில் ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகள் புழக்கம் குறைந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து மறைந்து வந்தது. சாதாரணமாக 2,000 ரூபாய் நோட்டைப் பார்ப்பதே அரிதாய்ப் போய்விட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கை, 2,000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்து வருவதை படம் பிடித்துக்காட்டியது. அதில், 2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், 2021 மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 245 கோடியாகவும், 2022 மார்ச் மாதம் 214 கோடியாகவும் குறைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

2020-ம் ஆண்டில் இருந்தே ஏ.டி.எம். மையங்களில் ரூ.2,000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அது மட்டுமின்றி 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவதே 2018-19-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது.

2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் நோட்டுகளின் ஆயுள் 4-5 ஆண்டுகளில் முடிந்து விடும் என தகவல்கள் கூறுகின்றன.

2018-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இது மொத்த நோட்டுகளில் 37.3 சதவீதம் ஆகும்.

கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 10.8 சதவீதம்தான். இவை, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம் ஆகும்.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுகிறது.

* 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.

* 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

* ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.

* நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெருமளவில் பதுக்கியுள்ளதாக நம்பப்படுகிற 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டு வரச்செய்யும் வகையில்தான் இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்